எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகனை சரமாரியாக தாக்கிய தாய் - திருத்தணி கோவிலில் பரபரப்பு


எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகனை சரமாரியாக தாக்கிய தாய் - திருத்தணி கோவிலில் பரபரப்பு
x

கோப்புப்படம்

திருத்தணி முருகன் கோவிலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகனை, தாய் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

கும்பகோணத்தைச் சேர்ந்த 31 வயது இளம்பெண் ஒருவர், தற்போது தனது குடும்பத்துடன் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் வசித்து வருகிறார். அவர், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 31 வயது வாலிபரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு வாலிபரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி நேற்று அரக்கோணத்தில் பெண் வீட்டார் சம்மதத்துடன் தனது காதலியை அந்த வாலிபர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் புதுமண தம்பதிகள், மணக்கோலத்துடன் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மணப்பெண்ணின் உறவினர்களுடன் வந்தனர். மலைக்கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வாகன நிறுத்துமிடத்துக்கு புதுமண தம்பதிகள் வந்து கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தனது உறவினருடன் அங்கு வந்த வாலிபரின் தாயார், தனது எதிர்ப்பையும் மீறி காதலியை திருமணம் செய்து கொண்ட மகனை, மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் கண் எதிரேயே சரமாரியாக தாக்கினார். இதை பார்த்து வாலிபரின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் செய்வதறியாது கதறி அழுதபடி பரிதவித்தனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களும் இதனை வேடிக்கை பார்த்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருத்தணி போலீசார், இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் திருத்தணி முருகன் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story