மகன் உயிரிழந்த செய்தியை அறிந்த அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து உயிரிழந்த தாய்

மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் வாசுதேவன். இவரது மனைவி பேபி சரோஜா. தம்பதியினருக்கு ராஜன், ராஜேந்திரன் என்ற 2 மகனும், 1 மகளும் உள்ளனர். இதில் ராஜன், ராஜேந்திரன் ஆகியோர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜேந்திரன் சென்னையில் தான் வேலை செய்யும் தனியார் கம்பெனியில் பணியை முடித்து விட்டு வேலூரிலிருந்து தனது சொந்த கிராமமான வண்ணாங்குளத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கி அவர் படுகாயமடைந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் ராஜேந்திரனை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மருத்துவனையில் முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலைக் கேட்டவுடன் அவரது தாயார் பேபி சரோஜா (80) மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.