பிரார்த்தனை நிறைவேறியதால் வீரமாகாளியம்மன் கோவிலில் கிடாவெட்டி விருந்து வைத்த இஸ்லாமிய தம்பதி

ஜாகிர் உசேன் குடும்பத்தினர் மனம் உருகி வீரமாகாளியம்மன் கோவிலுக்கு சென்று வேண்டி கொண்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் விளார் சாலை, நாவலர் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜாகிர்உசேன் (வயது52). இவரது மனைவி தன்சிலா (48). இவர்களது மகன் பாரீஸ்கான் (27) பி.இ.பட்டதாரி. பாரீஸ்கான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இவரது நிலைமையை அறிந்த நாவலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜாகிர் உசேனுக்கு ஆறுதல் கூறியதோடு, அந்த பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கும் வீரமாகாளியம்மன் கோவிலில், பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கூறினர்.
அதே போல் ஜாகிர் உசேன் குடும்பத்தினரும் மனம் உருகி வீரமாகாளியம்மன் கோவிலுக்கு சென்று வேண்டி கொண்டுள்ளனர். வேண்டுதல் படி, ஜாகிர் உசேனின் மகன் பூரண குணமடைந்து வீடு திரும்பியதால், வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தார்.
அதன்படி நேற்று வீரமாகாளியம்மன் கோவிலில் ஜாகிர்உசேன் குடும்பத்தினர் பொங்கல் வைத்து, படையலிட்டு, பின்னர் கிடாவெட்டி அந்த பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தனது நேர்த்தி கடனை நிறைவேற்றினார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






