முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை

கோப்பு படம்
பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா இன்று நடைபெறுகிறது.
கமுதி,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். அதே நேரத்தில், சென்னை அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துவார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உக்கிரப்பாண்டி தேவர்இந்திராணி தம்பதியினருக்கு மகனாக 30.10.1908 அன்று பிறந்தார். தனது சிறு வயது முதல் அந்நியர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கத் தொடங்கினார். ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய முக்கியக் கொள்கைகளைத் தனது வாழ்நாளில் இறுதிவரை பின்பற்றினார். அரசியலிலும், ஆன்மிகத்திலும் பெருமைக்குரியவராகத் திகழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 30.10.1963 அன்று மறைந்தார்.
2007-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அவர் வாழ்ந்த இல்லம் புனரமைக்கப்பட்டு நூற்றாண்டு தோரண வாயில் அமைக்கப்பட்டு, புகைப்படக் கண்காட்சிக் கூடம், அணையா விளக்கு, புதிய நூலகக் கட்டிடம், முளைப்பாரி மண்டபம், முடி காணிக்கை மண்டபம் அமைக்கப்பட்டது.
கருணாநிதி, தேவர் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் நெல்லை மாவட்டம் மேல்நீலித நல்லூர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆகிய 3 இடங்களில் அரசு கல்லூரிகள், மதுரை மாநகரில் மிக உயரமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை முதலியவற்றை அமைத்துத் தேவர் பெருமகனாருக்குப் பெருமைகள் சேர்த்தார். இதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் புதிதாக அமைத்து, 28.10.2024 அன்று திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






