நாமக்கல்: சட்டவிரோதமாக சாயக் கழிவுகளை வெளியேற்றிய 3 ஆலைகள் மீது அதிரடி நடவடிக்கை


நாமக்கல்: சட்டவிரோதமாக சாயக் கழிவுகளை வெளியேற்றிய 3 ஆலைகள் மீது அதிரடி நடவடிக்கை
x

2 நிறுவனங்களின் மின்சார இணைப்பை துண்டித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சாய ஆலை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், குமாரபாளையம் பகுதியில் 2 நிறுவனங்களில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக் கழிவு நீர், சட்டவிரோதமாக இரவு நேரங்களில் நேரடியாக கால்வாய் மூலம் காவிரி ஆற்றில் கலக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் நேற்று இரவு ஆய்வு நடத்தியபோது, 2 நிறுவனங்கள் சட்டவிரோதமாக சாயக் கழிவு நீரை ஆற்றில் வெளியேற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 2 நிறுவனங்களுக்கும் மின்சார இணைப்பை துண்டித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேபோல் பள்ளிப்பாளையம் சமயசங்கிலி கிராமத்தில் ஏற்கனவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாய ஆலையில், இரவு நேரத்தில் ஜெனரேட்டர் உதவியுடன் சாயப்பட்டறையை இயக்கி சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீரை காவிரி ஆற்றில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

1 More update

Next Story