நாமக்கல்: அரசு பள்ளியின் கழிவறையில் மாணவன் மர்ம மரணம்

நாமக்கல்லில் ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் கழிவறையில் மாணவன் மர்ம மரணம் அடைந்து கிடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கவின்ராஜ் வழக்கம்போல் பள்ளிக்கு இன்று சென்றுள்ளான். இந்நிலையில், கழிவறைக்கு சென்று வருகிறேன் என கூறி விட்டு சென்றிருக்கிறான்.
ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வகுப்புக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள், மாணவன் கவின்ராஜை தேடி கழிவறைக்கு சென்றுள்ளனர். கழிவறையில் மாணவன் மயக்கமடைந்து கிடந்துள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மாணவன் உயிரிழந்து விட்டான் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். பள்ளி மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்து, மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அலறியடித்துக்கொண்டு மகனை பார்ப்பதற்காக சென்றனர். இதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவன் இறப்புக்கு காரணம் கேட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரித்தனர். இதனால், போலீசாருக்கும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவன் உயிரிழந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






