டாஸ்மாக் முறைகேட்டை திசை திருப்பவே நீட் விவகாரம் - எல்.முருகன் விமர்சனம்


டாஸ்மாக் முறைகேட்டை திசை திருப்பவே நீட் விவகாரம் - எல்.முருகன் விமர்சனம்
x
தினத்தந்தி 9 April 2025 1:38 PM (Updated: 9 April 2025 3:06 PM)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும் இணைந்துதான் நீட் தேர்வை கொண்டு வந்தனர் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

நீலகிரி

ஊட்டியில் உள்ள முகாம் அலுவகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. மண்டல தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழக மக்களை திசை திருப்புவதில் தி.மு.க அரசு குறியாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும் இணைந்துதான் நீட் தேர்வை கொண்டு வந்தனர். அப்போது மத்தியில் மந்திரிகளாக இருந்த ஆ.ராசா முதல் டி.ஆர்.பாலு வரை யாரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. இன்றைக்கு நீட்டை எதிர்ப்பதாகச் சொல்லி நாடகமாடி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு மாணவர்களை நாடு முழுவதும் தற்போது தயார் செய்து வருகிறோம். அரசு பள்ளிகளில் பயின்று வரும் பழங்குடியின மற்றும் பட்டியல் சமுதாய மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர்.

டாஸ்மாக்கில் பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த டாஸ்மாக் ஊழலில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் என்ற ஒரு போலியான நாடகத்தை முதல்-அமைச்சர் நடத்துகிறார். இதையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

உதகை மருத்துவக் கல்லூரி உட்பட 11 மருத்துவக் கல்லூரிகளை 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்படி ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரியை மீண்டும் வந்து தொடங்கி வைத்த முதல்-அமைச்சரின் நாடகத்தை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்தியாவின் தொழில்நுட்பத்தில், வளர்ச்சிக்கான ஒரு அடையாள சின்னமான பாம்பன் பாலத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும் அன்று கிட்டத்தட்ட ரூ.8,300 கோடி ரூபாய்க்கான திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும் விதமாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்காக முதல்-அமைச்சர் தமிழக மக்களிடத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

அதேபோல நீட் தேர்வை அவர்கள்தான் கொண்டு வந்தார்கள். அதற்கு அவர்கள்தான் பொறுப்பு; அந்த பொறுப்பை உணர்ந்து தமிழக மக்களிடத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story