மாதாமாதம் மின் கட்டணம் வசூலிப்பதற்கு; ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதில் அலட்சியம் - ராமதாஸ்


மாதாமாதம் மின் கட்டணம் வசூலிப்பதற்கு; ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதில் அலட்சியம் - ராமதாஸ்
x
தினத்தந்தி 26 Jan 2026 3:32 PM IST (Updated: 26 Jan 2026 5:14 PM IST)
t-max-icont-min-icon

அரசின் மீதான கோபத்தை வாக்காளர்கள் வாக்களிக்கும்போது வெளிப்படுத்துவார்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மின்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், வசூலிப்பதிலும் நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாடு அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறையால் நடுத்தரமக்கள் அதிக மின் கட்டணம் செலுத்தவேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மின்கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன்.

இந்நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசியபோது, 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகள், வணிக பயன்பாட்டிற்கான மின்இணைப்புகளுக்கு ஸ்மார்ட்மீட்டர் பொருத்த தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 80 லட்சம் இணைப்புகளுக்கு பொருத்துவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்மீட்டர் மென்பொருள் மூலம் இயங்கவுள்ளது. இதன் மூலம் மின்சாரத் திருட்டை தடுத்தல், துல்லியமாக மின்சாரத்தை கணக்கிடுதல், மின்சார பயன்பாட்டை ஒரேஇடத்தில் இருந்து கணக்கிடுதல் போன்றவற்றை ஸ்மார்ட்மீட்டர் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளாகப் பட்டியலிடுகின்றனர் என்றார். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மின்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது, ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அவை பொருத்தப்படும். ஸ்மார்ட்மீட்டர் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிட்டு வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என்றார்.

கடந்த ஆண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த டெண்டர் விடப்பட்டது என்றார். டிசம்பர் மாதம் அமைச்சர் சிவசங்கர் இதையே முன் மொழிந்தார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் 221-வது வாக்குறுதியில் இரண்டு மாதங்களுக்கு 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்வரையில் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் தற்போது சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த மேலும் 2 ஆண்டுகாலம் தேவைப்படும் என்றும் அதன் பின் மாதாமாதம் மின் கணக்கீடு செய்ய அரசு முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2026 சட்டசபைத்தேர்தல் கோடைகாலமான மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது மின்சாரத்தை அதிக அளவு பயன்படுத்துவார்கள். இதனால் ஏற்படும் மின் கட்டண சுமையை ஏற்கும் அனைத்துதரப்பு மக்களும் தங்களின் கோபத்தை வாக்களிப்பதில் காண்பிப்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story