நெல்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழா மேடையில் கட்டு விரியன் பாம்பு

நெல்லையில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
நெல்லை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி, நேற்று திருநெல்வேலி வந்த ஸ்டாலின், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிலையில், இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.694 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மேடையில் பல்வேறு நிறங்களால் ஆன ரோஜா உள்ளிட்ட பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக, விழா மேடையில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பூவுக்குள் மறைந்திருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு, தூய்மை பணியாளர் கண்ணன் என்பவரை கையில் கடித்தது.
வலியால் துடித்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பாம்பு கடித்ததால் கையில் அவருக்கு அதிக வீக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழா மேடையில் கட்டு விரியன் பாம்பு இருந்தது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.






