நெல்லை ஆணவக்கொலை வழக்கு; கைதான சுர்ஜித் மற்றும் தந்தைக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

2 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில், இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நெல்லை ஆணவக்கொலை வழக்கு; கைதான சுர்ஜித் மற்றும் தந்தைக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
Published on

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணவேனி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் (வயது 24) என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் வசித்து வந்தபோது, அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார் (வயது 26) படித்துள்ளார். அப்போது, கவின்குமாருக்கும், சுபாஷினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த கவின்குமார் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 27-ந்தேதி கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். இதனை அறிந்து அங்கு சென்ற சுபாஷினியின் தம்பி சுர்ஜித், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கவினை தனியாக அழைத்துச் சென்று, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயம் அடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக சுர்ஜித் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 30-ந்தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்த நிலையில், 2 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில், இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து இருவருக்கும் வரும் 26-ந்தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com