தவெக மாநாட்டில் பவுன்சர்களால் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: வெளியான புதிய வீடியோ

சரத்குமார் என்ற இளைஞர் அளித்த புகாரின் பேரில் விஜய் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
கடந்த 21ஆம் தேதி மதுரையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தவெக மாநாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் விஜய் நடந்து வந்து தொண்டர்களை சந்திப்பதற்காக சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ராம்ப் வாக் மேடை அமைக்கப்பட்டது. இதில் தவெக தலைவர் விஜய் நடந்து வந்த போது இளைஞர்கள் பலரும் ராம்ப் வாக் மேடையில் ஏறி ஓடி வந்தனர். விஜய் உடன் செல்ஃபி எடுக்க, கட்டிப்பிடிக்க, கட்சி துண்டை அணிவிக்க முயன்றனர்.
அப்போது விஜய் உடன் வந்திருந்த பவுன்சர்கள் இளைஞர்களை தடுத்தனர். இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையத்தை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர், விஜய் மாநாட்டில் பவுன்சர்கள் தூக்கி வீசியது தன்னைத்தான் எனவும், பவுன்சர்கள் வீசியதில் தனக்கு உடல் மற்றும் மனதளவில் காயம் ஏற்பட்டதாகவும் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே, தவெக மாநாட்டில் ராம்ப் வாக்கில் ஏறியது நான்தான் என்று அஜய் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதனால், உண்மையாகவே மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட இளைஞர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பான மற்றொரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், கீழே வீசப்பட்ட இளைஞரை, பவுன்சர்கள் பத்திரமாக இறக்கிவிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மாநாட்டில் பாதுகாவலர்களால் தூக்கி வீசப்பட்டது பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் இல்லை. தவறான தகவல் சமூக ஊடகங்கள் மற்றும் ஒரு தொலைக்காட்சியில் பரவி வருகிறது. அகற்றப்பட்ட அந்த தொண்டர் விழுப்புரத்தை சேர்ந்த விஜய் ஆகும். அவரே சமூக ஊடகங்களில் தோன்றி தன்னையே பாதுகாவலர்கள் அகற்றினார்கள் என்று கூறியுள்ளார். கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத சிலர் இதுபோன்று அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என்றார்.






