திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x

கோப்புப்படம் 

திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகள் சந்தனமாரி (24 வயது) பி.ஏ. பட்டதாரியான இவருக்கும், தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த டிரைவர் இசக்கிமுத்துவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சந்தனமாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்ததால், மேலதேவநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். அவர் 2 மாதங்களாகியும் கணவர் வீட்டுக்கு செல்லாதது குறித்து தாயார் சங்கரம்மாள் கேட்டபோது, கணவர் இசக்கிமுத்துவுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி சந்தனமாரி அழுதார்.

இதுகுறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையின்போது, இசக்கிமுத்து இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்று உறுதியாக கூறியதால் இருவரும் சமாதானமாக சென்றனர். எனினும் சந்தனமாரி கணவருடன் கடையத்திற்கு செல்லாமல், மேலதேவநல்லூரில் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார். கணவர் இசக்கிமுத்துவுடன் செல்போனில் பேசி வந்தார். இருவரும் நேரில் சந்தித்தும் பேசி வந்தனர். சந்தனமாரி தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் செல்ல போவதாகவும், படிப்பதற்கு அது வசதியாக இருக்கும் என்றும் தாயாரிடம் கூறினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தனமாரி வீட்டு மாடி அறையில் திடீரென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சந்தனமாரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், களக்காடு போலீசார் விரைந்து சென்று, இறந்த சந்தனமாரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சந்தனமாரியின் சாவுக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து நெல்லை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை முன்பாக நேற்று உறவினர்கள் திரண்டனர். அவர்கள் திடீரென்று நெல்லை - திருச்செந்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர். திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்ததால் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story