நீலகிரி: சாலையில் உலா வரும் புலியால் பொதுமக்கள் பீதி


நீலகிரி: சாலையில் உலா வரும் புலியால் பொதுமக்கள் பீதி
x

குந்தா மின்வாரிய பகுதியில் நள்ளிரவில் புலி உலா வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே குந்தா நீர் மின் நிலையம் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியை சுற்றி ஏராளமான தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி உள்ளன. இதனால் அங்கிருந்து காட்டு யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மின் வாரிய பகுதிக்குள் நுழைந்து வருகின்றன.

இந்தநிலையில் சமீபத்தில் இரவு நேரத்தில் புலி ஒன்று மின்வாரிய பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து குந்தா சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை கண்ட புலி, வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தை பார்த்தவுடன் அசராமல் நின்றது. சிறிது நேரம் நின்ற புலி பின்னர் சாலைக்கு வந்து வனப்பகுதிக்குள் செல்ல முயற்சி செய்தது.

அங்கு ஏற முடியாததால் மீண்டும் சாலையில் நடந்து கொண்டை ஊசி வளைவை கடந்து, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. புலி நடமாடிய பகுதி பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் தான் உள்ளது. மேலும் அந்த சாலை 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கக்கூடிய சாலையாகும். சாலையில் புலி உலா வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புலி நடமாட்டத்தால் குந்தா மின்வாரிய பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் புலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

1 More update

Next Story