எந்த ஒரு தேசியச் சின்னத்தையும் அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு


எந்த ஒரு தேசியச் சின்னத்தையும் அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு
x

தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.

சென்னை

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த கவர்னர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ந் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது. அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. இன்னும் சற்று நேரத்தில் (காலை 9.30 மணிக்கு) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்ஜெட் எதை நோக்கி வடிவமைக்கப்பட்டிருக்கிறது, இந்த பட்ஜெட்டின் பெருநோக்கம் என்ன என்பதை முதல்-அமைச்சர் அழகாக கோடிட்டு காட்டியிருக்கிறார். அவருடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு 'எல்லோர்க்கும் எல்லாம்' என்கிற தத்துவத்தை நோக்கி இயங்கி வரக்கூடிய அரசு என்பதை நாம் அனைவரும் மிக நன்றாக அறிவோம்.

எனவே அந்த தத்துவத்துக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடிய வகையில், தமிழ்நாட்டு மக்களுடைய வளர்ச்சிக்கு மேன்மேலும் வித்திடக் கூடிய வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பட்ஜெட் இலச்சினையில் ₹-க்குப் பதிலாக 'ரூ' இடம்பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "எங்களைப் பொறுத்தமட்டில், எந்த ஒரு தேசிய சின்னத்தையும் அவமானப்படுத்துவதோ அல்லது அவற்றை குறைத்து மதிப்பிடுவதோ நோக்கம் இல்லை. இந்திய ஒருமைப்பாட்டிலும், இறையாண்மையிலும், இந்திய திருநாட்டின் வளர்ச்சியிலும் நாங்கள் பெருமதிப்பு கொண்டிருக்கக் கூடியவர்கள்" என்று கூறினார்.


Next Story