இமயமலை போன்ற அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது - பொள்ளாச்சி ஜெயராமன்


இமயமலை போன்ற அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது - பொள்ளாச்சி ஜெயராமன்
x

அ.தி.மு.க., சோதனைகளை தாண்டி வெற்றிப்பாதையில் செல்லும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

கோவை,

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.இதனைத் தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நேற்று மாலை நேரில் சென்ற செங்கோட்டையன், விஜய்யை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். திருப்பூர் முன்னாள் எம்பி சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர்.

இந்தநிலையில், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம். எல்.ஏ., கூறியதாவது:-

அ.தி.மு.க., தொடங்கப்பட்ட நேரத்தில் இருந்து எத்தனையோ சோதனையான நேரங்களில் பலர் இந்த இயக்கத்தை கைவிட்டு சென்றார்கள். 2010-க்கு முன்பாக அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு மற்றும் பலர் இந்த கட்சியை விட்டு சென்றார்கள். இருந்தாலும் அ.தி.மு.க., சோதனைகளை தாண்டி வெற்றிப்பாதையில் செல்லும். நிச்சயமாக 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமருவதை யாராலும் தடுக்க முடியாது. யாருடன் யார் போனாலும் கட்சி என்பது நிரந்தரமானது, நிலையானது. இமயமலை போன்றது அ.தி.மு.க.,

இதில் ஏற்படும் சிதறல்கள் எல்லாம் கரைந்து போகும் பனிக்கட்டிகள் போல. மீண்டும் பனிக்கட்டி உருவாகும். அதுபோல இயக்கம்,கொள்கை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கும்வரை அ.தி. மு.க.வை அசைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story