பூங்காவுக்காக ஒதுக்கிய இடங்களில் வேறு கட்டிடங்கள் கட்டக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பூங்காவுக்காக ஒதுக்கிய இடங்களில் வேறு கட்டிடங்கள் கட்டக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
பூங்காவுக்காக ஒதுக்கிய இடங்களில் வேறு கட்டிடங்கள் கட்டக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரம் தெற்கு தொண்டைமான் ஊருணி பகுதியை சேர்ந்த குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாநகராட்சியில் உள்ள எழில்நகரில் குழந்தைகள் பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது வரை அந்த இடம் பூங்காவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மாநகராட்சி கமிஷனரின்கீழ் செயல்படும் அதிகாரிகள், திடீரென அந்த பூங்காவை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் பூங்கா இடத்தை வேறு பயன்பாட்டுக்கு கையகப்படுத்தக்கூடாது என்ற விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளன. எனவே எழில்நகர் பூங்காவில் ரேஷன் கடை கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும். அந்த இடத்தை குழந்தைகள் பூங்காவாக பாதுகாத்து பராமரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் வக்கீல் ராஜராஜன் ஆஜராகி, எழில்நகர் பூங்காவில் அப்பகுதி குழந்தைகள் நாள்தோறும் விளையாடி மகிழ்கின்றனர். அங்கு ரேஷன் கடை கட்டினால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.பின்னர் நீதிபதிகள், பூங்காவுக்கான இடத்தில் எப்படி ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினர்? என கேள்வி எழுப்பினர். இது சட்டவிரோதம். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்து பிற்பகலில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.பின்னர் இந்த வழக்கு பிற்பகலில் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் நம்பிசெல்வன் ஆஜராகி, திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சம்பந்தப்பட்ட இடம் அரசு புறம்போக்கு நிலம். இங்கு சிறுவர் பூங்கா இருந்ததாகவும், அப்பகுதி கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதால் அங்கு ரேஷன்கடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. பின்னர் புகார்களின் அடிப்படையில் அந்த பணியை நிறுத்த மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார் என கூறப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் வேறு கட்டிடங்கள் கட்டக்கூடாது. இந்த வழக்கை பொறுத்தவரை பூங்கா இடத்தில் ரேஷன் கடை கட்டும் பணி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது என்பதை பதிவு செய்து கொள்கிறோம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.






