முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் ஏறும் விவகாரம்: தெற்கு ரெயில்வே அதிரடி உத்தரவு


முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் ஏறும் விவகாரம்:  தெற்கு ரெயில்வே அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 15 Oct 2025 3:07 PM IST (Updated: 15 Oct 2025 5:15 PM IST)
t-max-icont-min-icon

முன்பதிவு பெட்டிகளுக்குள், அத்துமீறி நுழைந்து இருக்கைகளை வட மாநில பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்வதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு திருப்பூரில் வாழும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். வடமாநிலத்தவர்கள் பலரும் குடும்பம் குடும்பமாக சொந்த ஊர்களுக்கு தங்களது குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் ரெயில்களில் சென்றுவருவதால், திருப்பூர் ரெயில் நிலையத்தில் அளவுக்கு மீறிய கூட்டம் கடந்த 11-ம் தேதி முதல் காணப்படுகிறது.

இந்நிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது முன்பதிவு செய்யாமல் இருந்த பயணிகள் பலரும், முன்பதிவு ரெயில் பெட்டிகளில் ஏறியதால், முன்பதிவு செய்து பயணித்து வந்த பயணிகள் பலரும் அவதி அடைந்தனர். முன்பதிவு பெட்டிகளில் துணி மூட்டைகள், பைகள் உள்ளிட்டவற்றுடன் ஏறியதால், முன்பதிவு பெட்டியில் பதிவு செய்து பயணித்த பயணிகள் கடும் அவதி அடைந்ததுடன், ரெயில்வே துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ரெயில் பயணச்சீட்டு பரிசோதகரை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக பயணச்சீட்டு பரிசோதகர் உரிய பதில் அளிக்காத நிலையில் அதிருப்தி அடைந்தனர். முன்பதிவு பெட்டியில் அத்துமீறி பயணம் செய்யும் பயணிகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், ரெயில்களில் வடமாநில பயணிகள் அத்துமீறி ஏறுவதை முறைப்படுத்த போலீசாருக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே போலீசாருக்கு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story