கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய இயலாது: விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் மறைமுக தாக்கு

கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை,
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலைச் சந்திக்க தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. தி.மு.க. தலைவர் மற்றும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் வெற்றி வாக்குச் சாவடியாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் தேர்தல் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், இளைஞர் அணி செயலாளரும் துணை முதல் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடத்தியது போல, தற்போது சட்டமன்றத் தேர்தலுக்காக இளைஞர் அணி வடக்கு மண்டல மாநாட்டை திருவண்ணாமலையில் இன்று நடத்தினார். இதில் 91 தொகுதிகளைச் சேர்ந்த 1.5 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“தமிழகத்தை காக்க உருவாக்கப்பட்ட இயக்கம் தி.மு.க. பீகார், உத்தரப் பிரதேசத்தில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்காது. பாஜக மதம் பிடித்த யானை என நினைக்கலாம். அந்த யானையை அடக்கும் அங்குசம் நம் தலைவரிடம் உள்ளது. நீங்கள் எவ்வளவு சீண்டினாலும், தி.மு.க. இளைஞர் அணி களத்தில் தயாராக இருக்கும். கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்தும் ஒன்றும் செய்ய இயலாது. 2026-ல் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. ‘தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்’ என்று கூறியவர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின். குஜராத்தில் உட்கார்ந்து கொண்டு மிரட்டலாம் என்று நினைத்தால், அது கனவில் கூட நடக்காது.
சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் ‘எடப்பாடியை முதல்வர் ஆக்குவோம்’ என்று தீர்மானம் போட்டார்கள். என்ஜின் இல்லாத காரை எவ்வளவு தள்ளினாலும் பலன் இல்லை. என்ஜின் இல்லாத காராக அ.தி.மு.க. உள்ளது.அந்த என்ஜின் இல்லாத காரை பா.ஜ.க. என்ற லாரி எப்படியாவது இழுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறது. அ.தி.மு.க.-வில் இருந்து ஒவ்வொருவராக வெளியே போகிறார்கள். ஆனால் ‘நான் மட்டுமே பொதுச் செயலாளர்; யார் வேண்டுமானாலும் போங்கள், யார் வேண்டுமானாலும் வாருங்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை வைத்து அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். பாசிச சக்திகளையும், அதற்கு அடிமையாக இருப்பவர்களையும் விரட்டியடிப்போம். இது கணக்குக் காட்டும் கூட்டம் இல்லை. ஒரு கோடி இளைஞர்கள் கூடினாலும் பிரச்சினை இல்லை; உங்கள் கணக்கை சுக்குநூறாக உடைக்கும் கூட்டம். வானவில் நிறங்கள் கலராக இருக்கும்; ஆனால் அது நிரந்தரம் கிடையாது. ஆனால் உதய சூரியன் மட்டுமே நிரந்தரம்” என்றார்






