முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

இன்று முக்கிய முடிவை அறிவிக்க போகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சென்னை,
உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்தபடியே அரசு அலுவல்களை கவனித்து வந்தார். உடல் நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் வந்து தனது பணிகளை தொடங்கினார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார். முதல்-அமைச்சர் காலை அடையாறு பூங்காவில் நடை பயிற்சி செய்தபோது, அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். உடல்நிலை குறித்து முதல்-அமைச்சரிடம் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், முதல்-அமைச்சருடன் அவர் என்ன பேசினார் என்ற விபரம் வெளியாகவில்லை.
பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசித்து வருகிறார். த.வெ.க.வுடன் ஓ.பி.எஸ். தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. சென்னையில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன் என்று நேற்று ஓ.பி.எஸ். கூறியிருந்த நிலையில் ஆலோசனைக்கு பிறகு கூட்டணி குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.






