தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே தண்ணீர் தோட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி பானம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (34 வயது). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி (28 வயது). இந்த தம்பதிக்கு சுபாஷினி (வயது 7) என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஜெய்கிருஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
சுபாஷினி கடம்பத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று கார்த்திக் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த ஈஸ்வரி தனது மூத்த தகள் சுபாஷினியை பள்ளிக்கு அனுப்புவதற்காக அவரை தயார் செய்து கொண்டிருந்தார்.
அப்போது குழந்தை ஜெய்கிருஷ் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தது. சுபாஷினியை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்தில் ஜெயகிருஷை தாய் சற்று கவனிக்கவில்லை. குழந்தை விளையாடிக் கொண்டே வீட்டில் தரையோடு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. சிறிது நேரம் கழித்து இதைக் கண்ட ஈஸ்வரி அலறி அடித்துக் கொண்டு குழந்தை ஜெயகிருஷை மீட்டு சிகிச்சைக்காக கடம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






