"ஆபரேஷன் மஹாதேவ்": இந்திய ராணுவத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் - நயினார் நாகேந்திரன்

கோப்புப்படம்
மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், மன நிம்மதியளிக்கிறது என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
"ஆபரேஷன் மஹாதேவ்" மூலம் மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ள நமது இந்திய ராணுவத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் "ஆபரேஷன் மஹாதேவ்" என்ற பெயரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது நமது மத்திய அரசு. அந்த வகையில் ஸ்ரீநகரில் உள்ள லிட்வாஸ் என்ற அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் நமது பாதுகாப்பு படையினருக்கும் நடந்த மோதலில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், மன நிம்மதியளிக்கிறது.
அந்தப் பயங்கரவாதிகளால் நிகழவிருந்த பெரும் அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது நமது வலிமைமிகுந்த இந்திய இராணுவம். நாட்டு மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு இத்தகையை முன்னெடுப்புகளைத் துரிதப்படுத்தியுள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மரியாதைக்குரிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அவர்களுக்கும், மதிப்பிற்குரிய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






