நெல் கொள்முதல்: தவறை திருத்திக்கொள்ளாமல், உண்மையை மறைக்கும் உதயநிதி - அதிமுக கண்டனம்


நெல் கொள்முதல்: தவறை திருத்திக்கொள்ளாமல், உண்மையை மறைக்கும் உதயநிதி - அதிமுக கண்டனம்
x

கொள்முதல் செய்யப்படாத, முளைவிட்ட நெல் மூட்டைகளையும் கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை,

அதிமுக திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக பெய்துவரும் பருவ மழையால் தமிழகம் முழுவதும், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நெற்பயிற்கள் நீரில் மூழ்கியுள்ளன. வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தும், விளைவித்த நெல்மணிகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத இந்த விவசாய விரோத திமுக அரசு, வேளாண் பெருமக்களை ஏமாற்றும் விதத்தில் பசப்பு வார்த்தைகளைப் பேசி நாடகமாடி வருகிறது. 2023-ஆம் ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஸ்டாலினே நேரடியாக மேட்டூருக்குச் சென்று தண்ணீர் திறந்துவிட்டார். அப்போது, நானும் ஒரு டெல்டாகாரன் என்று வீம்பு வசனம் பேசினார். அந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டு, நெல் விளையும் தருணத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் காய்ந்து விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார்கள். மேலும், திமுக அரசு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டில் விவசாயிகளை இடம்பெறச் செய்யாததால், அவர்களுக்கு இழப்பீடும் கிடைக்காமல் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், முறையாக விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் இருப்பதாலும்; ஈரப் பதத்தைக் காரணம் காட்டி பெரும்பாலான விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்காத காரணத்தாலும், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாயிகளால் குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்த சூழ்நிலை பெரும் கோரக் காட்சிகளாகத் தெரிகிறது.

வேளாண் பெருமக்களின் அவதியை, உணர்வை புரிந்துகொண்ட முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடியார், கடந்த 22.10.2025 அன்று டெல்டா மாவட்டங்களுக்கு ஓடோடி வந்தார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண் பெருமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் விவசாயப் பெருங்குடி மக்கள் திமுக அரசின் அலட்சியத்தால் தாங்கள் படும் அவலங்களை கண்ணீர் மல்க எடுத்துக் கூறினார்கள். அறுவடை செய்ய வேண்டிய நிலையில் நீரில் மூழ்கி அழுகிப் போன நெற்பயிர்களையும், கொள்முதல் நிலையங்களுக்கு முன்பு திறந்தவெளியிலும், சாலைகளின் ஓரங்களிலும் கொட்டி வைக்கப்பட்டு முளைவிட்டுப்போன நெல்மணிகளையும் புரட்சித் தமிழரிடம் காட்டி தங்களுடைய துயரத்தை வெளிப்படுத்தினார்கள். இவை அனைத்தையும் ஊடகங்களும், பத்திரிகைகளும், சமூக ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின. அதை யாரும் மறைக்க முடியாது.

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் வாங்காமல் சுமார் 15 நாட்களுக்கு மேல் தாமதப்படுத்துவதை அறிக்கை வாயிலாகவும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அரசின் கவனத்தை ஈர்த்த பிறகும் அலட்சியமாக இருந்த இந்த அரசு, 22.10.2025 அன்று டெல்டா மாவட்டத்திற்கு நேரடியாக வந்த பிறகு, புதுப்புது வசனங்களை எழுதி, வேளாண்மைத் துறை அமைச்சரும், உணவுத் துறை அமைச்சரும், எல்லாவற்றிற்கும் மேலாக டெல்டா மாவட்டக்காரன் என்று தம்பட்டம் அடிக்கும் துணை முதல்-அமைச்சரும், ராஜா வீட்டு கன்றுக்குட்டியுமான உதயநிதியும் ஓரங்க நாடகங்களை நடத்தி வருகிறார்கள்.

எந்த அரசாக இருந்தாலும் சரி, ஆண்டுதோறும் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்தும், அவைகளை சரக்கு ரெயில்கள் மூலமாக தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பது வாடிக்கை.

வயிறு எரிந்து கொதித்துப்போய் நிற்கும் நம் விவசாயிகளின் துயரைத் துடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத கையாலாகாத இந்த அரசின் துணை முதல்-அமைச்சர் நேற்று (23.10.25) தஞ்சாவூர் சென்று அங்குள்ள ரயில் நிலையத்தில் நின்றுகொண்டு நெல் மூட்டைகளை ஏற்றிச்செல்லும் ரெயில் பெட்டிகளை கொடியசைத்து சுமார் 4000 மெட்ரிக் டன் நெல்லை ரெயிலில் அனுப்பி வைத்ததாக, தமிழக அரசின் செய்திக் குறிப்பு என்ற பெயரில் படம் காட்டி இருக்கிறார்கள். இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையால் நனைந்து முளை விட்டுள்ளன. இதில் 4000 மெட்ரிக் டன் என்பது சொற்பமே.

ஏறத்தாழ டெல்டா மாவட்டம் முழுவதும் 35 சதவீதத்திற்கும் மேல் குறுவை சாகுபடி நெற்பயிர் அறுவடை செய்யப்படாமல் தொடர் மழையால் நெல்மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டு, விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் அவல நிலை உருவாகியுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக குடோனுக்கு எடுத்துச் சென்றும், மற்றும் கொள்முதல் நிலையங்களுக்கு முன்னால் தேங்கிக் கிடக்கும் நெல்லை கொள்முதல் செய்தால்தான், அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய முடியும்.

'மத்திய அரசு குழு வந்துள்ளது' என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அரசு விரைந்து செயல்பட்டு, 17 முதல் 22 சதவீதம் வரை ஈரப் பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொள்முதல் செய்யப்படாத, முளைவிட்ட நெல் மூட்டைகளையும் கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.

டெல்டா மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் நடவு செய்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அனுப்பி, ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

டெல்டா மாவட்டத்து மக்கள் கடந்த 20 நாட்களாக செய்வதறியாது திகைத்து நிற்கும் இல்லாத சூழ்நிலையில், அவர்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்குக் கூட முதல்-அமைச்சர் ஸ்டாலினும், அவருடைய தொண்டரடிப் பொடியாழ்வார்களும், பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக தோள் கொடுத்து நிற்கும் எங்கள் கழகப் பொதுச் செயலாளர் பதில் சொல்கிறோம் என்று தவறை பூசி மெழுகி மறைக்கும் விடியா திமுக மாடல் ஸ்டாலின் அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story