மது அருந்துவதை கண்டித்த பெற்றோர்... வாலிபர் எடுத்த விபரீத முடிவு

கோப்புப்படம்
தீபாவளிக்கு பின்பு வாலிபர் சரிவர வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி.கார்டனை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய இளைய மகன் சந்தோஷ்குமார் (21 வயது), எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது கூலி வேலைக்கு செல்வதும் வழக்கம். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தாக தெரிகிறது. தீபாவளிக்கு பின்பு, சந்தோஷ்குமார் சரிவர வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. வேலைக்கு சென்றாலும் அதன் சம்பள பணத்தை மது அருந்துவதற்கே செலவிட்டுள்ளார்.
இதனால் சந்தோஷ்குமாரின் பெற்றோர், ‘மது அருந்த வேண்டாம்' என அவரை பலமுறை கண்டித்துள்ளனர். ஆனாலும் சந்தோஷ்குமார், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பெற்றோர் மீண்டும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சந்தோஷ்குமார் வீட்டின் பிரதான அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அபிராமபுரம் போலீசார், சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






