காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்.. மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் எடுத்த விபரீத முடிவு

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் இந்த வீபரீத முடிவை எடுத்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த வேலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 26), எலக்ட்ரீசியன். இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 16 வயது சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியை அவரது பெற்றோர் கண்டித்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை 10 மணியளவில் சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றதை அறிந்த வசந்தகுமார் சிறுமியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் சிறிது நேரம் மனம்விட்டு பேசினர்.
அப்போது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்வது என்று கனத்த இதயத்துடன் முடிவு செய்தனர். அதன்படி வசந்தகுமார் சிறுமியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். இதில் ரத்தம் பீய்ச்சியடித்து சிறுமி மயங்கி கீழே சரிந்தார்.
இதில் அவர் இறந்து விட்டதாக நினைத்த வசந்தகுமார் சிறுமியின் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மயக்கம் தெளிந்து கண் விழித்த சிறுமி வசந்தகுமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






