தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. அலுவலகம் அருகில் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று வழக்கம்போல காலை பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்களை போலீசார் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து பேருந்தில் ஏற்றினார்கள்.

பின்னர், கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் திருவான்மியூர், மயிலாப்பூர், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, வானகரம், வேம்புலியம்மன் கோவில் தெருவில் உள்ள மண்டபத்தில் ஏராளமான பகுதி நேர ஆசிரியர்களை தங்க வைத்திருந்தனர். அதில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் (50 வயது) என்பவரும் இருந்தார். அவர் தங்க வைக்கப்பட்ட இடத்தில் இருந்து திடீரென தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக சக ஆசிரியர்கள் அங்கிருந்த போலீசார் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து, வானகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story