அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விவகாரம்: போராட்ட கூட்டமைப்புகளுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை

தொடர்போராட்டத்தை அறிவித்துள்ள கூட்டமைப்புகளுடன் அமைச்சர்கள் குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
சென்னை,
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது முழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
இந்த 3 ஓய்வூதிய திட்டங்களில் எந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்? என்ற குழுவின் பரிந்துரையை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில் இந்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்களைக் கொண்ட அமைச்சர் குழு ஆலோசனை நடத்தியது. பின்னர் அதுபற்றி முதல்-அமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ ஆகிய அமைப்புகள் வரும் 6-ந் தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருந்தது.
திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் உறுதி அளித்துள்ளன. தற்போது ஓய்வூதியம் குறித்து தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதால், அதை போராட்டம் அறிவித்துள்ள கூட்டமைப்புகளுக்கு தெரிவிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்த கூட்டமைப்புகளுக்கு பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு தரப்பில் இருந்து போன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும். அதை ஏற்றுக்கொள்வதா? அல்லது மறுப்பதா? என்பது குறித்து கூட்டமைப்புகள் முடிவெடுத்து அறிவிக்கும். 6-ந் தேதி நடத்துவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்பது அதன் பின்னர் தெரிய வரும்.






