தொடரும் மழை சென்னையில் 3 நாட்களாக வீடுகளில் முடங்கிய மக்கள் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனீர் கடைகளில் வடை, பஜ்ஜி பலகாரங்கள் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனை ஆகி வருகிறது.
சென்னை,
டிட்வா புயல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மயிலாடுதுறையில் கன மழை பெய்தது. பின்னர் 1-ந்தேதி முதல் சென்னையில் மழை குறையும் என்று வானிலை தெரிவித்து இருந்தது.ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக 1-ந்தேதி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இடை விடாது பெய்த மழையினால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.பின்னர் நேற்றும், இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழைகாரணமாக பள்ளிகளுக்கு 2 நாட்களாக விடுமுறை விடப்பட்டு உள்ளன. சாலைகளில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. நகர் முழுவதுமே குளிர்ச்சியான குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கருமேகங்கள் சூழ்ந்து ஊட்டியில் இருப்பது போல காட்சி அளிக்கிறது.தேனீர் கடைகளில் விற்பனை அதிகரித்து உள்ளது. குறிப்பாக வடை, பஜ்ஜி,சமோசா, பக்கோடா போன்ற பலகாரங்கள் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனை ஆகி வருகிறது.சாலை ஓர பழக்கடைகள் உள்ளிட்ட சிறுவியாபாரங்கள் முற்றிலுமாக முடங்கி உள்ளன. சாலை ஓர கடை வியாபாரத்தை வாழ்வாதார வியாபாரிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இன்று கார்த்திகை தீப நாள் என்பதால் பூக்கடைகளில் மட்டும் விற்பனை நடந்து வருகிறது. எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் 8 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1-ம்தேதி மழையின் போது மாநகரில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. தண்ணீரை வெளியேற்றும் பணிகளை முடுக்கி விட்டு வருகிறது. மழை நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ள பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் மாநகர காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றப்படுகின்றன. காவல்துறையில் உள்ள பேரிடர் மீட்பு குழுவினரும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள்.
சென்னை, திருவள்ளூரை கனமழை மேகங்கள் மீண்டும் சூழ்ந்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ள நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.






