பெரம்பலூர்: திடீரென பற்றி எரிந்த கார் - 5 பேர் படுகாயம்

விபத்தில் படுகாயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இதில் பெண்கள் உள்பட 5 பேர் காரில் இருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கார் தீப்பிடித்து எரிந்தது. காரில் பயணித்தவர்கள் தீயை பார்த்து அலறி துடித்தனர்.
பின்னர், பலத்த தீ காயங்களுடன் அவர்கள் காரை விட்டு வெளியேறினர். அவர்களை மீட்ட அருகில் இருந்தவர்கள். உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் வைத்திருந்த ரூ.12 லட்சம் சீட்டு பணமும் தீயில் கருகியது. படுகாயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






