தற்காலிக கொடிக்கம்பங்களுக்கு அனுமதி கட்டாயம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கோப்புப்படம்
அனுமதி பெறாமல் நடப்படும் தற்காலிக கொடிக்கம்பங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக கொடிக்கம்பங்கள் அமைக்கும்போது, சாலையில் தார்கள் மீதும், சாலை நடுவில் உள்ள தடுப்புகள் மீதும் கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது. 3 நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்களை வைத்திருக்க கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள், தேர்தல் பரப்புரைகள், கருத்தரங்கள், ஊர்வலங்கள், தர்ணா, பண்டிகைகள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான தற்காலிக கொடிக்கம்பங்கள் நட அனுமதி பெற வேண்டும். அரசாணை எண் 629, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நாள் 16.09.2025-ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சென்னை மாநகராட்சியின் முன் அனுமதி பெற்று கொடிக்கம்பங்கள் நடப்பட வேண்டும்.
அவ்வாற முறையான முன் அனுமதி பெறாமல் நடப்படும் தற்காலிக கொடிக்கம்பங்கள் சென்னை மாநகராட்சியால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அகற்றப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






