பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்

தவறிழைத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கியிருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில் தனியார் நிறுவனத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான அனுமதி சட்டவிரோதமாக வழங்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரம் மிகுந்த சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் ராம்சார் நிலங்களாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டுவதற்கான அனுமதியை வனம், சுற்றுச்சூழல் மற்றும் சென்னை பெருநகர கட்டுமான குழுமம் வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கனமழை தொடரும் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் சென்னை பெரும்பாக்கம் பகுதி மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வரும் நிலையில், தற்போது அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படும் பட்சத்தில் வரும் காலங்களில் வெள்ள பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈர நிலங்களான ராம்சார் நிலங்களில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது எனச் சட்டமும், பசுமை தீர்ப்பாயமும் தெளிவு படுத்திய நிலையிலும், தற்போது சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகாரை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, ராம்சார் சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து விரிவான விசாரணை நடத்தி, அது உறுதியாகும் பட்சத்தில் அந்த அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, இவ்விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com