சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு போராட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு, பா.ம.க. நேரில் அழைப்பு

தி.மு.க. தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் பா.ம.க. சார்பில் அழைப்பு விடப்பட்டு வருகிறது.
சென்னை,
பா.ம.க. சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வருகிற 17-ந்தேதி போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க. தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் பா.ம.க. சார்பில் அழைப்பு விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் த.வெ.க. கட்சி தலைமை அலுவலகத்துக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் அழைப்பு கடிதத்தை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு கொண்டு வந்து கொடுத்தார்.
இதுதொடர்பாக வக்கீல் பாலு நிருபர்களிடம் கூறுகையில், ‘போராட்டத்தில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம். நிச்சயமாக கலந்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். தவறான புரிதலின் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறார். இந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்' என்றார்.
பா.ம.க. அழைப்பை த.வெ.க. ஏற்று அதில் பங்கேற்குமா? என்று த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘நல்ல நோக்கத்தோடு அழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். தலைவரிடம் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். நல்ல கோரிக்கை இது.
தமிழ்நாட்டில் சமூகநீதி பேசும் தி.மு.க. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு சொல்வது கண்டிக்கத்தக்கது. இது கண்துடைப்பு. கண்டிப்பாக இதுதொடர்பான எல்லா போராட்டங்களையும் த.வெ.க. முன்னெடுக்கும்' என்றார்.






