திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீசார்-ஆந்திர பக்தர்களிடையே கைகலப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீசார்-ஆந்திர பக்தர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திைக தீப விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை ஆந்திராவை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை வேகமாக செல்லும்படி சன்னதியில் இருந்து வெளியே இழுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், ஆந்திரா பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் போலீசாருக்கும், ஆந்திரா பக்தர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உள்பட ஓரிரு போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகராறில் ஈடுபட்ட ஆந்திரா பக்தர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது ஆந்திரா பக்தர்களுக்கும், போலீசருக்கும் இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினர். கைகலப்பு சம்பவத்தினால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.






