குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் வீடு புகுந்து பாலியல் சில்மிஷம்: போலீஸ்காரர் கைது

மனோகுமார் தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகுமார் (வயது 29). இவர் தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு இளம்பெண் ஒருவர் குளித்துக் கொண்டு இருந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மனோகுமார், அந்த பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தார். இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த பெண்ணிடம் மனோகுமார் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் திடுக்கிட்ட அந்த பெண் சத்தம் போடவே அங்கிருந்து மனோகுமார் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மனோகுமாரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






