பொள்ளாச்சி: சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

சிவன் கோவில்களில் நடைபெற்ற அன்னாபிஷேக பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் இன்று ருத்ரலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சுந்தரேஸ்வரருக்கு நடைபெற்ற அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்ற சேரன் தொழிலாளர் காலனி செல்வ விநாயகர் கோவில் உள்ள சிவபெருமானுக்கும், கரப்பாடி அமணீஸ்வரருக்கும், கோட்டூர் ரோடு காமாட்சியம்மன் கோவிலில் உள்ள சிவபெருமானுக்கும் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் காலை 11.30 மணிக்கு அன்னாபிஷேக அலங்காரம் கலைக்கப்பட்டு, 12 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் 12.30 மணிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி ஜோதி நகர் ஜோதி விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதி லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோன்று பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.






