தமிழ் மொழி மீது பிரதமர் மோடி கொண்டுள்ள பற்று நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது - நயினார் நாகேந்திரன்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் நமது தமிழகம் தனிச் சிறப்பிடம் பெற்றது மிக்க மகிழ்ச்சி என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நமது பாரதப் பிரதமர் மோடி பாரத மக்களிடம் உரையாடும் “மனதின் குரல்” நிகழ்ச்சியின் இன்றைய அத்தியாயத்தில் நமது தமிழகம் தனிச் சிறப்பிடம் பெற்றது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் துவங்கி வைப்பதற்காக கோவை மாநகருக்குத் தான் வருகை புரிந்ததை நினைவு கூர்ந்த நமது பிரதமர், தென்னிந்தியாவில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து தான் ஈர்க்கப்பட்டதாகவும், உயர் தகுதி பெற்ற இளைஞர்கள் இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுப்பது கண்டு பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், நமது பழங்கால விவசாய முறையான இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் மக்களுக்கு விளக்கினார்.
அடுத்ததாக, உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியும், உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான காசி மாநகரும் ஒன்றாக சங்கமிக்கும் “காசி தமிழ்ச் சங்கமம்” நிகழ்வானது, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் துவங்கவிருப்பதை அறிவித்ததோடு மட்டுமன்றி, காசி தமிழ்ச் சங்கமத்தின் கருப்பொருள் “தமிழ் கற்கலாம்” என்பதையும் தெரிவித்த நமது பாரதப் பிரதமரின் தமிழ் நேசமும் அவர் தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்றும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.
மேலும், காசி தமிழ்ச் சங்கமமானது “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற குறிக்கோளை வலுப்படுத்தும் நிகழ்வு என்பதைக் குறிப்பிட்ட நமது பாரதப் பிரதமர், “தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி உயர்வானது, தமிழ் இந்தியாவின் பெருமிதம்” என்ற தமிழைப் போற்றும் வாக்கியங்களைத் தமிழிலேயே கூறிய தருணங்கள் எனது காதுகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
தமிழ் மொழியை வெறும் அரசியல் மொழியாக மட்டுமே பயன்படுத்திவரும் சில தமிழகத் தலைவர்களுக்கு மத்தியில், தமிழ் தமது தாய்மொழியாக இல்லாவிட்டாலும் அதன்மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் நமது பாரதப் பிரதமர் உண்மையில் ஓர் அதிசய மகான் தான்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






