தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும் - அமைச்சரின் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு


தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும் - அமைச்சரின் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு
x

தமிழ்நாடு, உயர்கல்வித் துறையில் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டின் சமூகநீதியையும் ஏழை-எளிய மாணவர்களின் நலனையும் பாதிக்கும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு, உயர்கல்வித் துறையில் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. பெரியார், அம்பேத்கர் போன்ற சமூகநீதிப் போராளிகளின் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட இம்மாநிலம், உயர்கல்வியில் உயர்ந்த சேர்க்கை விகிதம் (GER) மற்றும் தரமிக்க நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் வாயிலாக, சமூகச் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அடையப்பட்டவை. இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்கு 2025-இல் கொண்டுவரப்பட்ட திருத்தம் இச்சாதனைகளுக்கு இடையூறாக அமையும் என்பதால், தமிழக அரசு இம்மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியதோடு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டு மறு ஆய்வு செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். இதனை எஸ்டிபிஐ கட்சி மனமுவந்து வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் குரலுக்கு மதிப்பளித்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story