மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற புதின்: பார்வையாளர் பதிவேட்டில் எழுதியது என்ன?

மகாத்மா காந்தியின் கொள்கைகளையும், மதிப்புகளையும் இந்தியா பாதுகாக்கிறது என புதின் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி,
ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லிக்கு வந்த புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். இரவு விருந்துக்குப்பின் புதினுக்கு பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்தார். சமீப காலமாக இந்தியா-அமெரிக்கா உறவுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழலில், ரஷிய அதிபரின் இந்திய வருகை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் ரஷிய மொழியில் ஒரு குறிப்பை புதின் எழுதினார். அதில், “மகாத்மா காந்தி அகிம்சை மற்றும் உண்மை மூலம் நமது பூமியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு விலைமதிப்பில்லாத பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது செயல்களின் தாக்கம் இன்றுவரை பொருத்தமானதாக உள்ளது.
மகாத்மா காந்தி ஒரு புதிய, நியாயமான, பன்முக உலக ஒழுங்கை நோக்கிய பாதையைக் காட்டினார். அந்த உலகம் இப்போது உருவாகி வருகிறது. சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு பற்றிய அவரது போதனைகளை இந்தியா இன்று உலக மக்களுடன் சேர்ந்து - சர்வதேச அரங்கில் அவரது கொள்கைகளையும், மதிப்புகளையும் பாதுகாக்கிறது. ரஷ்யாவும் அவ்வாறே செய்கிறது” என்று எழுதியுள்ளார்.






