வாரவிடுமுறையில் சொந்த ஊர் சென்ற பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே

. நாகர்கோவில், கோவை, திருவனந்தபுரம் என முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் வாரவிடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்து, ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
தனியார் ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் வேறு வழியின்றி முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. சில பயணிகள் பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலையையும் காண முடிகிறது. இந்த நிலையில், பயணிகள் இன்ப அதிர்ச்சி அடையும் வகையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:
சிறப்பு ரயில்கள்
1. நாகர்கோவில் – தாம்பரம்
நாகர்கோவிலில் இருந்து நாளை இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு கிளம்பும் ரயில், நாகர்கோவிலுக்கு அதிகாலை 4.15 மணிக்கு சென்றடையும்.
2. திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர்
திருவனந்தபுரத்தில் இருந்து நாளை பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னை எழும்பூருக்கு மறுநாள் காலை 11.20 மணிக்கு வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து திங்கட்கிழமை பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் ரயில், திருவனந்தபுரத்திற்கு இரவு 8 மணிக்கு சென்றடையும்.
3. கோவை – சென்னை சென்ட்ரல்
கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கோவையில் இருந்து நாளை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9.20 மணிக்கு வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. நாகர்கோவில், கோவை, திருவனந்தபுரம் என முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.






