ராமநாதபுரம்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

இடிபாடுகளில் சிக்கிய ரவியை மீட்க தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரமாக போராடினர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள மகதுனியா தொடக்கப் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. அந்த பணியில் ஏர்வாடியை சேர்ந்த ரவி என்பவர் ஈடுபட்டு வந்தார். ஒருபுறம் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, மறுபுறம் இருந்த பக்கவாட்டுச் சுவர் இடிந்து அவர் மேல் விழுந்துள்ளது.
இடிபாட்டில் சிக்கிய தொழிலாளி ரவி, வெளியே வர முடியாமல் தவித்துள்ளார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ராமநாதபுரம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரமாக போராடி இடிபாட்டில் சிக்கிய தொழிலாளியை மீட்டனர்.
இதன் பின்னர் அவரை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ரவியை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட தொழிலாளி ஒருவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






