சேலத்தில் 1.10 லட்சம் பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்

தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்தில் 1.10 லட்சம் பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
Published on

சேலம்,

தமிழகம் முழுவதும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களது வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் வகையில் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வகையில் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களை வாங்கி வரும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 92 ஆயிரத்து 998 பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பொது வினியோக திட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த மாதம் (அக்டோபர்) 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் ரேஷன் கார்டில் 65-70 வயதுக்குட்பட்டோரும் தாயுமானவர் திட்டத்தில் 17,267 பேர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 6 ஆயிரத்து 421 முதியவர்கள், 3 ஆயிரத்து 844 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 265 பேருக்கு மாதந்தோறும் வீடுகள் தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இந்த திட்டமானது 1,207 குழுக்களாக பிரித்து 1,447 வாகனங்கள் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 70 ரேஷன் கார்டுகளுக்கு 1 வண்டி வீதமும், மலைப்பகுதிகளில் 50 ரேஷன்கார்டுகளுக்கு 1 வண்டி வீதமும், கிராம பகுதிகளில் 60 ரேஷன் கார்டுகளுக்கு 1 வண்டி எனவும் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தாயுமானவர் திட்டத்தில் வீடுகள் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் வீடுகள் தோறும் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் முதல்-அமைச்சர் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமை பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த 2 நாட்களில் பயனாளிகள் ரேஷன் பொருட்களை அவரவர் வீடுகளிலேயே பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com