மது போதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலையால் பரபரப்பு


மது போதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலையால் பரபரப்பு
x

கன்னியாகுமரியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், லீபுரம் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(எ) கொண்டை மாரி (வயது 34). இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தற்போது கன்னியாகுமரி அருகே சுண்டன்பரப்பு நாச்சியார்குளத்தின் கரையில் வசித்து வந்தனர்.

மாரிமுத்து சொந்தமாக செப்டிக் டேங்க சுத்தம் செய்யும் வாகனம் வைத்து வேலை செய்து வத்தார். நேற்று காலை வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து மாரியம்மாள் தனது கணவரை பல்லேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. எனவே கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மாரியம்மாள் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாரிமுத்து லீபுரம் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாரிமுத்துவை யாரோ அரிவாளால் வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் மாரிமுத்துவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல தகவல்கள் கிடைத்தன.

மாரிமுத்துவும் அதே பகுதியை சேர்ந்த 4 பேரும் நேற்று ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நடந்த மோதலில், மாரிமுத்து அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவருடன் சேர்ந்து மது அருந்திய 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்து வருவதால், 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட மாரிமுத்து மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. மது போதை தகராறில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story