இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் - தாம்பரம் பெண் சார்பதிவாளர் கைது


இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் - தாம்பரம் பெண் சார்பதிவாளர் கைது
x

தாம்பரம் சார்பதிவாளர் பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களிடம் அதிக அளவில் லஞ்சப்பணம் வாங்கி வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.

சென்னை

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதி சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரேவதி என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்து வருகிறார்.

இவரும், இவருக்கு கீழே பணிபுரியும் மற்றொரு பெண்ணும் சேர்ந்து தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களிடம் அதிக அளவில் லஞ்சப்பணம் வாங்கி வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. பத்திர பதிவுத்துறை உயர் அதிகாரிகள், இது தொடர்பாக அடிக்கடி ஆய்வு செய்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்து வந்தனர்.

இந்த நிலையில் தாம்பரம் அருகே நெடுங்குன்றம் பகுதியில் நிலம் பதிவு செய்ய வந்தவரிடம் நிலத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் லஞ்சமாக தரும்படி சார்பதிவாளர் ரேவதி கேட்டுள்ளார். பத்திரம் பதிய வரும்போது ரூ.2 லட்சமும், பத்திரப்பதிவு முடிந்த பிறகு பத்திரத்தை வாங்கும்போது மீதி ரூ.8 லட்சமும் பணம் தருவதாக பத்திரம் பதிவு செய்ய வந்தவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். சார்பதிவாளரை கையும் களவுமாக பிடிப்பதற்காக ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.

அதன்படி தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணத்தை சார் பதிவாளர் ரேவதியின் அறிவுறுத்தலின்பேரில் பத்திரப்பதிவு பணிகள் செய்யும் பிரவீன் குமார் என்பவரிடம் கொடுத்தார். அவர் ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சார்பதிவாளர் ரேவதி மற்றும் பிரவீன்குமார் இருவரையும் கைது செய்தனர்.

1 More update

Next Story