தூய்மைப் பணியாளர் தற்கொலை: திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


தூய்மைப் பணியாளர் தற்கொலை:  திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை: ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!

சென்னை மாநகராட்சியின் இராயபுரம் மண்டலத்தில் உள்ள 50-ஆம் வட்டத்தில் தூய்மைப் பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், கடந்த 5 மாதங்களாக பணியும், ஊதியமும் வழங்கப்படாமல் வறுமையிலும், மன உளைச்சலிலும் வாடி வந்த தூய்மைப் பணியாளர் டி.ரவிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால் பணி வழங்கப்படாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் எத்தகைய வறுமையையும், மன உளைச்சலையும் அனுபவித்து வருகின்றனர் என்பதற்கு டி.இரவிக்குமார் அவர்களின் தற்கொலை சிறிய எடுத்துக்காட்டு தான்.

தூய்மைப் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 150-ஆம் நாளை நெருங்கும் போதிலும், அவர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்க மறுப்பதற்கு காரணம் ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனங்களிடமிருந்து கிடைத்த வெகுமதிகள் தான். அந்த நிறுவனங்களிடமிருந்து ஆட்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தங்களின் லாபத்திற்காகவும், பேராசைக்காகவும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பதை மன்னிக்க முடியாது. இரவிக்குமாரின் தற்கொலைக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story