சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் - மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை,
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை - தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அப்போது அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. சில இடங்களில் மழை பெய்யவில்லை.
இதையடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த 'ரெட் அலர்ட்' விலக்கி கொள்ளப்பட்டது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதை அடுத்து இன்று (அக்டோபர் 17) சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், புதுச்சேரியிலும் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.