கோவில் கோபுரத்தில் பீடி சுற்றும் பெண்களின் சிற்பம் - தென்காசியில் சுவாரஸ்யம்


கோவில் கோபுரத்தில் பீடி சுற்றும் பெண்களின் சிற்பம் - தென்காசியில் சுவாரஸ்யம்
x
தினத்தந்தி 2 Oct 2025 2:19 PM IST (Updated: 2 Oct 2025 8:47 PM IST)
t-max-icont-min-icon

கணவரை இழந்த பல பெண்களின் வாழ்வாதாரத்தை பீடி சுற்றும் தொழில் காப்பாற்றி இருக்கிறது.

தென்காசி,

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பீடி இலை சுற்றும் தொழில் என்பது மிகவும் பிரபலமான குடிசைத் தொழிலாக விளங்கி வருகிறது. பலரது வீடுகளில் இந்த தொழிலை நம்பியே குழந்தைகளின் கல்வி, வீட்டுச் செலவுகள் உள்ளிட்டவற்றை பெண்கள் சமாளிக்கின்றனர். குறிப்பாக கணவரை இழந்த பல பெண்களின் வாழ்வாதாரத்தை இந்த பீடி சுற்றும் தொழில் காப்பாற்றி இருக்கிறது.

அத்தகைய தொழிலை செய்து சுயமரியாதையுடன் வாழும் பெண்களை கவுரவிக்கும் விதமாக, தென்காசி மாவட்டத்தில் கோவில் கோபுரத்தின் மீது பீடி சுற்றும் பெண்களின் சிற்பத்தை இடம்பெறச் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள நத்தம் மாரியம்மன் கோயில் திருப்பணியின் ஒருபகுதியாக, கோபுரத்தில் பீடி இலைகள் சுற்றும் பணியின் சிற்பத்தை இடம்பெறச் செய்துள்ளனர்.

கோபுரத்திற்கான சிற்ப வேலைப்பாடுகளில் தமிழர்களின் பாரம்பரியமான பனைமரம் ஏறுதல், கிணற்றில் நீர் இரைத்து விவசாயம் செய்தல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றுடன் சேர்த்து பீடி இலைகள் சுற்றும் பணிக்கு பெருமை சேர்க்கும் விதமாக அதன் சிற்பத்தையும் செதுக்கி இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தங்களுக்கு வாழ்வாதாரமான பீடி இலைகள் சுற்றும் பணியில் கிடைக்கும் வருமானத்தையும், பொதுமக்கள் கோவில் திருப்பணிக்காக அளித்து உள்ளதாக பொதுமக்கள் நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story