சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் - டெண்டர் கோரியது தமிழக அரசு

கிண்டியில் உள்ள தேசியப் பூங்கா வளாகத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு சுமார் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீண்ட கடற்கரையை கொண்டது. இதில் 5 வகையான கடல் ஆமை இனங்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து வருகின்றன. ஆலிவ் ரிட்லி என்ற இன ஆமைகள் அதிக அளவில் தமிழக கரையில் முட்டையிடுகின்றன. இந்த ஆமைகள் கடல் சூழலியலை பாதுகாப்பதிலும், மீன் வளத்தை பெருக்குவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
எனவே இவற்றை பாதுகாக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரூ.6 கோடியே 30 லட்சத்தில் சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இத்திட்டத்திற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. கிண்டியில் உள்ள தேசியப் பூங்கா வளாகத்தில் 4,400 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.






