சென்னையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

போராட்டத்தை கைவிட மறுத்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை,
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று 6வது நாளாக போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் மேம்பாலத்தின் ஒருபுறத்தில், இடைநிலை ஆசிரியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புத்தாண்டு தினமான இன்றும் 7-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த எழும்பூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, போராட்டத்தை கைவிட மறுத்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர். எனினும், தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆசிரியர்களின் தொடர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






