மயிலாடுதுறை கூட்டத்தில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த சீமான்

ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோரை தமிழ்ப் பெரியார்கள் என்று சீமான் குறிப்பிட்டார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு வேண்டுமானால் ஈ.வெ.ரா. பெரியாராக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு இவர்கள்தான் தமிழ்ப் பெரியார்கள் என்று கூறினார்.
அதோடு இன்றைய பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் 2026 தேர்தலில் போட்டியிடப்போகும் 4 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். அதன்படி, பூம்புகார் தொகுதியில் இளையநகுலன், மயிலாடுதுறை தொகுதியில் காசிராமன், சீர்காழி தொகுதியில் அம்பேத்ராஜன் மற்றும் திருவிடைமருதூர் தொகுதியில் திவ்யபாரதி ஆகிய 4 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண்களையும், 117 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். மேலும் 234 வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தும் மாநாடு பிப்ரவரி மாதம் திருச்சியில் நடக்கும் எனவும் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






