ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்தார் சேகர்பாபு


ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்தார் சேகர்பாபு
x

ரூ.6.23 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (08.01.2026) இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, வி.க.நகர் மண்டலம், வார்டு-74, பெரம்பூர், ஏகாங்கிபுரம் 1வது தெருவில் மேயரின் 74ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய நவீன உடற்பயிற்சிக் கூடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இந்த உடற்பயிற்சிக் கூடமானது, 1,325 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மேலும், சைக்கிள், டிரெட்மில் உள்ளிட்ட நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் ஆகிய உபகரணங்களுடன் இந்தக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெரம்பூர், குளக்கரை சாலையில் மூலதன நிதியில் ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் 7,542 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பவுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்திற்கான பணியினையும், சோமசுந்தரம் நகரில் உள்ள திறந்தவெளி நிலத்தில் மாநகராட்சியின் சார்பில் ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் 14,558 சதுர அடி பரப்பளவில் புதிய பூங்கா அமைக்கும் பணியினையும் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

இந்த பூங்காவில் திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், தியான மேடை, நடைபாதை, இறகுப்பந்து மற்றும் மட்டைப் பந்து பயிற்சிக் கூடம், சிறுவர் விளையாட்டுத் திடல், நூலகம், கழிப்பிடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story