இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

சுய வேலைவாய்ப்பு பயிற்சியில் 18 முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று திருநெல்வேலி கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
Published on

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் உதவியுடன் நமது மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) மூலம், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மகாராஜநகரில் செயல்பட்டு வருகிறது. திருநேல்வேலி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் தற்போது இப்பயிற்சி நிறுவனம் மூலம் இரு சக்கர வாகன பழுதுபார்ப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுபார்ப்பு தொடர்பான 30 நாட்கள் கொண்ட இலவச பயிற்சிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியின்போது கூடுதலாக, சுயதொழில் துவங்குதல், பொருத்தமான வேலை வாய்ப்புகளை அடையாளம் காணுதல், வணிகத் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறந்த குணங்களை உருவாக்குதல் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியின்போது பயிற்சி குறித்த செயல் விளக்க வீடியோக்கள், தொழில்துறை உபகரணங்களின் பயன்பாடு, கணினி வகுப்புகள் மற்றும் மென் திறன் பயிற்சி மற்றும் நடைமுறை வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி முறைகள் பின்பற்றப்படுவதுடன் தொடர்புடைய துறையில் நிபுணர்களாக இருக்கும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் பயிற்சி நடத்தப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், பயிற்சியின் போது முக்கிய தொழில்துறை நிறுவனங்களுக்கு களப்பயணங்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் வெற்றிக்கதைகள் நேரடியாகச் சொல்லப்படுகின்றன. இளைஞர்களை குழுக்களாக அழைத்துச் சென்று சந்தை ஆராய்ச்சிக்காகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் முடிவில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பயிற்சியை முடித்த இளைஞர்கள் சுயதொழிலில் ஈடுபட உதவும் வகையில், பயிற்சி மைய அதிகாரிகளால் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பயிற்சியை முடித்த பிறகு இளைஞர்களுக்கு சுயதொழிலில் ஈடுபட கடன் உதவி தேவைப்பட்டால், வங்கிகளில் கடன் பெற பயற்சி மைய அதிகாரிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் 100 சதவீதம் செய்முறைப்பயிற்சிகளாக இருக்கும். மேலும் பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு சீருடை, அடையாள அட்டை, தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் பயிற்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சியில் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

ஆர்வமுள்ள இளைஞர்கள் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மகாராஜநகர் கிளையின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி (A63, 5-வது குறுக்குத் தெரு, மகாராஜநகர், திருநெல்வேலி- 627011.) மையத்தினை அணுகலாம். மேலும் இந்த பயிற்சிகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தினை 75399 38413, 75399 42413 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com